விடுதலைப் புலிகளும் போர் நிறுத்த ஒப்பந்த மீறல்களும்.
Sunday, February 19th, 200619-02-2006
முறைப்படி யுத்தநிறுத்த ஒப்பந்தம் அமுல்படுத்தப்படின் இனப் பிரச்சினை தீர்வும் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்தவும் முடியும் என்பதையே உலகின் அனைவரினதும் அபிப்பிராயமாகும். அக் கருத்து எனக்கு ஏற்புடையதல்ல. யுத்த நிறுத்த ஒப்பந்தமும் விடுதலைப் புலிகள் பற்றியும் இங்கே கூறியுள்ள கருத்துக்கு முழுப்பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். 50 ஆண்டுகளுக்கு மேலாக தீவிர அரசியலில் ஈடுபட்டிருக்கும் வயதில் முதிர்ந்த வழக்கறிஞரும் தமிழ் பிரஜையுமாவேன். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் 13 ஆண்டுகளுக்கு மேல் கிளிநொச்சியை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தியவனாவேன். எனது இக்கருத்தை தங்கள் நாட்டின் தலைவருக்கும், ஏனைய பொருத்தமான அதிகாரிகளுக்கும் தங்கள் அபிப்பிராயத்துடன் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சர்வதேச சமூகம் சில வெளிநாட்டுத் தூதுவர்கள், ஐரோப்பிய ஒன்றியம் பல வெளியூர், உள்ளுர் ஸ்தாபனங்களுடன் இலங்கை - நோர்வே அரசுகள் கடந்த இரு ஆண்டு காலமாக எடுத்த முயற்சியின் பயனாக விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டுள்ளனர். சுவிட்ஸர்லாந்து தூதுவர் பெனாடினோ ரெஹசோனி நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரஸ்ட்கார் ஆகியோர் கிளிநொச்சி சென்று பேச்சுவார்த்தை சம்பந்தமான ஒழுங்குகள் பற்றி விடுதலைப் புலிகளுடன் பேசினர். பேச்சுவார்த்தையின் பலாபலனை பற்றி அறிய உலக நாடுகள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கையில் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கள் தாம் போர்நிறுத்தம் சம்பந்தமாக மட்டுமே ஜெனீவாவில் பேசுவோம் எனக் கூறியது ஏமாற்றத்தைத் தருகிறது. அப்படியாயின் இந்த ஏற்பாடுகள் செய்து ஜெனீவா செல்லாது தொலைபேசியிலேயே இப் பிரச்சினையை பேசித் தீர்த்திருக்கலாம்.
போர்நிறுத்த ஒப்பந்தம் நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் சமாதானத்தைக் கொண்டுவரப் போகிறது என நான் ஆரம்பத்தில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை வரவேற்றேன். ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபின் விடுதலை புலிகளுடைய கர்வமும், சர்வாதிகாரப் போக்கும் அவர்களை பற்றிய எனது கருத்தை முற்று முழுதாக மாற்றிவிட்டது. பல்வேறு கடிதங்கள், அறிக்கைகள், செவ்விகள் மூலமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ், முஸ்லீம் மக்களை படிப்படியாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடிய பிழையான சில அம்சங்கள் உண்டு என்பதை பல தடவை நான் சுட்டிக்காட்டியுள்ளேன். ஒவ்வொருவரும், குறிப்பாக இலங்கை அரசு இத் துர்திஷ்டமான தமிழ், முஸ்லீம் மக்களை மீட்பாளர்கள் என்று கூறுபவர்களிடமிருந்து, மீட்டெடுக்க வேண்டிய கடமை இருந்தும் எனது வேண்டுகொளை ஏற்று இவ் ஒப்பந்தத்தை மாற்றவோ, அல்லது ரத்து செய்யவோ இல்லை. இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அரசை பலயீனமடையச் செய்ததேயன்றி விடுதலைப் புலிகளை, அவர்கள் பகுதியில் அவர்களை ஸ்திரப்படுத்தவும், அரசால் அவர்களிடமிருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவுமே வழிவகுத்தது. இன்று ஏறக்குறைய வடமாகாணம் முற்றாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதோடு அரச அதிகாரிகளை அவர்கள் மிரட்டி தம்மால் கூட்டப்படும் சந்திப்புக்களில் பங்குபெறச் செய்யவும், நியமனங்கள், இடமாற்றங்கள் சம்பந்தமாக தமது இஷ்டப்படி செயற்படுமாறு வற்புறுத்துகின்றனர். உடன்படிக்கையின் பல அம்சங்கள் விடுதலைப் புலிகளுக்கு சாதகமாக அமைந்துள்ள வேளையில் ஏனையவை சில இரு சாராருக்கும் இலாபகரமாக தோன்றினாலும் நன்கு அறிந்த சில காரணத்தினால் அரசின் பக்கத்தில் பெருமளவில் அவற்றை நடைமுறைப்படுத்த முடிவதில்லை.
ஒப்பந்தத்தின் சரத்து 1:2 இன்படி இரு சாராரும் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட முடியாது. இது சகல யுத்த நடவடிக்கைகளுக்கும் முற்றுபுள்ளி வைக்கும் அதேவேளை
(ய) நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவே சுடுகலன்களை பாவித்தல், ஆயுதங்களுடன் கூடிய திடீர் தாக்குதல்கள், மறைந்திருந்து தாக்குதல், படுகொலைகள், ஆட்கடத்தல்கள், இராணுவம் அல்லது பொது மக்களின் சொத்துக்களை அழித்தல், சதி செய்தல் தற்கொலை தாக்குதல் ஆழ ஊடுருவி தாக்குதல் போன்றவையும் அடங்கும்.
(டி) விமான குண்டு தாக்குதல்,
(உ) கடற்படையை தாக்குதல்
மேலே கூறப்பட்டவற்றுள் விமானத்தாக்குதல் உட்பட இரண்டொரு விடயங்களை தவிர்த்து, போர்நிறுத்த நான்கு ஆண்டுகாலத்தில் சகல குற்றங்களையும் விடுதலைப் புலிகள் புரிந்துள்ளனர். அதேகாலப்பகுதியில் இராணுவத்தினர் இத்தகைய குற்றங்கள் எதிலும் சமபந்தப்படவில்லை. போர்நிறுத்த ஒப்பந்தந்தத்தின் கீழ் நோர்டிக் நாடுகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய போர்நிறுத்த கண்காணிப்புக்குழு அறிக்கையின்படி விடுதலைப் புலிகள் சித்திரவதை, மிரட்டல், இளைஞர்களை கடத்தல், சிறுவர்களை யுத்தத்துக்கு சேர்த்தல், பணம் பறித்தல், தொந்தரவு செய்தல், நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தலுடன் பொது மக்களுக்கு எதிரான விரோத நடவடிக்கைகள் பலவற்றிலும் விடுதலைப் புலிகள் பங்குபற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களின் அறிக்கையின் பிரகாரம் விடுதலைப் புலிகள் மூவாயிரத்து நானூற்றி எழுபத்தொன்பது(3479), தடவைகளும், அரச படைகள் நூற்றி அறுபத்திரண்டு (162) தடவைகளும் உடன்படிக்கையை மீறியுள்ளனர். விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்ட இரண்டாயிரத்து முன்னூற்றி எண்பது(2380) பேரில் அறுநூறு (600) பேர் இளைஞர்கள். ஏனையோர் யுத்தத்துக்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட சிறுவர்களாவர். தளநிலைமை பற்றியும் விடுதலைப் புலிகளின் கடுமையான போர்நிறுத்த மீறல்கள் பற்றியும் சர்வதேசத்தின் கவனத்துக்கு கொண்டுவரத் தவறியமை இலங்கை அரசின் பெரும் பாரதூரமான தவறாகும். சர்வதேச சமூகம் இது பற்றி தெரிந்திருந்திருப்பின் விடுதலைப் புலிகளுடன் பேசுங்கள் என்று வற்புறுத்துவதற்கு பதிலாக பிடித்து வைத்திருக்கும் இளைஞர்களையும்;, சிறுவர்களையும் உடன் விடுவிக்கும்படி கண்டிப்புடன் கேட்டிருப்பர். இவ்வாறு பிடிக்கப்பட்டுள்ள அறுநூறு(600) இளைஞர்களும், ஆயிரத்து எழுநூறு (1700) சிறுவர்களுக்கும் என்ன நடந்தது அல்லது அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை நோர்வே அனுசரணையாளர்கள் விடுதலைப் புலிகளிடம் வற்புறுத்தி கேட்டிருக்க வேண்டும்.
ஒருவர் மீது ஒருவர் வன்முறையை பிரயோகிப்பதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். ஒருவரை கடத்தவோ, சித்திரவதை செய்யவோ இன்னொருவருக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது. தமிழர் புனர்வாழ்வு கழகத் தொண்டர்கள் (வுசுழு) அமைப்பைச் சேர்ந்த ஏழு தொண்டர்கள் கடத்தப்பட்டதையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன். இவர்களை யார் கடத்தினார்களோ அவர்கள் இவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ருளுயுஇ ருமு போன்ற நாடுகளில் இருந்து பல்வேறு கண்டனங்கள் வந்து குவிகின்றன. பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் புலிகளின் 22 த.தே.கூ பிரதிநிதிகள் விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டவர்களை பற்றி ஒரு வார்த்தை தன்னும் கூறாமல் இந்த வுசுழு கடத்தல் பற்றியே பிற நாட்டு தூதுவராலயங்கள் ஒவ்வொன்றொன்றாக சென்று முறைப்பாடு செய்கின்றனர்.
போர்நிறுத்த ஒப்பந்த சரத்து 1:8 இன் படி துணைப்படைகளின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. துணைப்படை என்ற வார்த்தை உபயோகிப்பது நீதி நெறிமுறைக்கு முரணானதும் ஏற்கக்கூடியதுமானதும் அல்ல. இந்தத் துணைப்படைகள் எனக் குறிப்பிடப்படுவது யார் என்பது சர்வதேச சமூகம் அறியாது இருந்திருக்கலாம.; 1980 களில் விடுதலைப் புலிகள் போன்று பல தமிழ் குழுக்கள் இன உரிமைக்காக போராடி வந்தன. அத்தனை குழுக்களிலும் தாமே மேலானவர்கள் என்ற நிலைப்பாட்டை அடைய விடுதலைப் புலிகள் முதலாவதாக மிதவாதிகளாகிய கூட்டணித் தலைவர்கள், முன்னணி தொண்டர்கள் ஆகியோரை கொலை செய்தபின் தமிழ் ஆயுதக் குழுக்களாகிய வுநுடுழுஇ Pடுழுவுநுஇ நுPசுடுகுஇ நுPனுPஇ நுNனுடுகு போன்ற இயக்கங்களின் தலைவர்களையும் , உறுப்பினர்களையும் படுகொலை செய்தார்கள். படுகொலைகளிலிருந்து தப்பியவர்கள் சிலர் நாட்டை விட்டு பிற நாடுகளுக்கு செல்ல, இன்னும் சிலர் அரசியலையே கைவிட்டு பொது வாழ்வில் ஈடுபட, எஞ்சியோர் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டனர். தற்பாதுகாப்புக்காக அவர்களில் சிலரிடம் அரசாங்கத்தின் அனுமதியுடன் வழங்கப்பட்ட ஆயுதங்கள் இருந்தது. இத்தகைய குழுக்களையே ஒப்பந்தத்தில் துணைப்படையாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒப்பந்தம் கைச்சாத்தானவுடன் இவர்களிடமிருந்த ஆயுதங்கள் மீளப்பெறப்பட்டு ஆயுத பலம் கொண்ட விடுதலைப் புலிகளுக்கு முன் நிராயுதபாணிகளாக விடப்பட்டுள்ளனர். இந்த வாய்ப்பை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட விடுதலைப் புலிகள் இந்த போர்நிறுத்த நான்கு ஆண்டுகாலத்தில் தமது அரசியல் விரோதிகளில் சுமார் எழுநூற்றைம்பது (750) பேர்வரை வடக்கு கிழக்கு மாகாணங்களில் மட்டுமன்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொன்று குவித்தனர். இத்தகைய கொலைகள் பல அவர்களி;ன் மனைவி, மக்கள் முன்னிலையில் கொடூரமாக நிகழ்ந்துள்ளன. போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திட முன்பும் கூட இத்தகைய கொலைகள் நிகழ்ந்துள்ளன. பல்வேறு நாட்டுத் தூதுவர்கள் இவர்களை சந்தித்து கொலைகள், ஆட்கடத்தல், சிறுவர்களை யுத்தத்துக்கு சேர்த்தல் போன்ற செயல்களை கைவிடுமாறு பல தடவை கூறியும் விடுதலைப் புலிகள் அதற்கு செவிமடுக்கவில்லை.
போர்நிறுத்த ஒப்பந்த சரத்து 2:10 ஏ-9 என்று கூறப்படும் கண்டி வீதி யுத்த நடவடிக்கை தவிர்ந்த மக்கள், பண்டங்கள் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டமை பற்றி கூறுவதாகும். பல ஆண்டுகாலமாக இப்பாதை மூடப்பட்டிருந்தது. இருசாராரும் திருகோணமலை ஹபரணை வீதி 24 மணிநேரமும் திறந்திருக்கப்பட வேண்டுமென ஒப்புக் கொண்டனர். வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சென்று வர வசதியாக இருக்கும் என்பதற்காகவே விடுதலைப் புலிகள் இதை விரும்பியிருந்தனர். ஏ-9 வீதி சம்பந்தமாக விசேட ஒழுங்குகள் நோர்வே அனுசரணையுடன் எடுக்கப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.
இந்த ஏ-9 பாதையில் எதுவித வரியோ, தீர்வையோ அறவிட விடுதலைப் புலிகளுக்கு அனுமதி வழங்கியவர்கள் யார் என்று தெரியாது. ஓமந்தை தடைமுகாமை தாண்டிச் செல்லும் ஒவ்வொரு பொருட்களுக்கும், வாகனத்துக்கும், பிரயாணிகளுக்கும் வரி அறவிடப்படுகிறது. அதன் விளைவாக உற்பத்தி செய்யபட்ட பண்டங்கள் கொழும்புக்கு கொண்டுவரப்படும் போது அவற்றின் விலை, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விலையிலும் பார்க்க கூடுதலாகவே இருக்கிறது. இந்த நடைமுறை ஏழைகளை கடுமையாக பாதித்தமையால் எல்லா மக்களும் அரசாங்கத்திடம் நிவாரணத்தை எதிர்பார்த்து நிற்கின்றனர். நடைபாதை வியாபாரிகள், மீன், காய்கறி விற்பனையாளர்கள் சிறு தேநீர் கடைக்காரர்கூட விட்டு வைக்கப்படவில்லை. ஓமந்தை சோதனைச் சாவடிகளுக்கு அப்பால் வாழ்கின்ற ஏழை மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். ஏ-9 வீதி விடுதலைப் புலிகளை பொறுத்தவரை தினமும் பல கோடி வருமானம் தரும் தங்கச் சுரங்கமாகும். பிற நாட்டில் இருந்து தமது உறவினர்களை பார்க்க வருபவர்களிடமிருந்த பணம் அறவிடுவது ஓர் புதிய வழிமுறையாகும். பிறநாட்டில் வாழ்ந்த நாள் ஒன்றுக்கு பிரித்தானிய ஒரு பவுண் வீதம் வரி செலுத்த வற்புறுத்தப்படுகின்றனர். எத்தகைய வியாபாரியும் யாழ்ப்பாணத்திலோ. கொழும்பிலோ ஈடுபட்டிருந்தாலும் வரி செலுத்த கடமைபட்டவர்களாவர்.
போர்நிறுத்த ஒப்பந்த சரத்து 1:13 எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத படு மோசமான அம்சமாகும். போர்நிறுத்த ஒப்பந்தத்துக்கு முன்பு அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் காலெடுத்து வைக்க முடியாது இருந்தவர்கள் இந்த சரத்துப்படி முதல் மாதம் ஐம்பது(50) பேரும் இரண்டாவது மாதத்தில் நூறு (100) பேரும் அதன் பின்பு எவரேனும் நிராயுதபாணியாக அரசியல் பணிக்கென அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நடமாட அனுமதி வழங்கப்பட்டது. பல ஆண்டுகளாக மிக சக்தி வாய்ந்த ஒரு குழுவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பிரதேசத்தில் அக்குழு அப்பிரதேசத்தை விட்டுச்சென்று மீண்டும் அப் பிரதேசத்துக்குள் வரும்போது அவர்களுக்கு வேண்டிய ஆயுதத்தை தம் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்தே பெற முடியும் என்ற உண்மையை பேச்சுவார்தையில் ஈடுபட்டிருந்த எவரின் மூளைக்கும் தோன்றாதது விந்தையாகும். அதனாலேயே நிராயுதபாணியாக என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தை ஏமாற்றும் நோக்கோடு இச் சரத்து சேர்க்கப்பட்டதென நான் கருதியதும் உண்டு. இந்த ஒப்பந்தத்தின்;படி இத்தகைய நடமாட்டம் வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு உட்பட்டதாக இருந்தும் இன்று அவர்கள் நாட்டின் எந்தப் பகுதியிலும் இருந்து கொண்டு ஆட்கடத்தல், பணம் பறித்தல், கொலை, மிரட்டல் போன்றவற்றில் நாளாந்தம் ஈடுபட்டு வருகின்றனர். இதுவே இன்று இலங்கையின் தற்போதைய நிலைமையாகும்
பின்வருவனவற்றை அமுல்படுத்த சர்வதேச சமூகம் விடுதலைப் புலிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்
1.சிறுவர்களை யுத்தத்திற்கு சேர்த்துக்கொள்ளல், ஆட்கடத்தல்கள்,மனித உரிமை மீறல்கள் போன்ற வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
2. கடத்தி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
3. யாரையும் இனிமேல் கொல்லமாட்டோம் என உறுதியளிக்க வேண்டும்.
4. வடக்கு கிழக்கு மாகாணத்தில் ஏனையோர் ஜனநாயக அரசியலில் செயல்பட அனுமதிக்க வேண்டும்.
5. ஜனநாயக நீரோட்டத்தில் அவர்கள் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தங்கள் உண்மையுள்ள
வீ ஆனந்தசங்கரி
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி
Posted in Media, Tamil | No Comments »